கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்

கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்

napoleon-நெபொலியன்

 

பிரபல பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் சாதாரணப் படை வீரனாக இருந்த சமயம் அவனும் மற்ற வீரர்களும் ஓர் இடத்தில் கூடாரம் அமைத்து முகாம் போட்டிருந்தார்கள். பகல் நேரத்தில் ஓய்வு மிகுதியாக இருந்தது. அதனால் வீரர்கள் அனைவரும் கூடாரத்தை விட்டு வெளியே சென்றார்கள். விளையாடிக்கொண்டும், சிங்காரப் பாடல் பாடிக்கொண்டு உல்லாசமாக அலைந்துகொண்டும் இருந்தார்கள்.

ஆனால், நெப்போலியன் மட்டும் பொழுதை வீணாக்கவில்லை. கூடாரத்திலேயே இருந்துகொண்டு நல்ல நூல்கள் சிலவற்றைக் கவனமாகப் படித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த கிராமப் பெண் ஒருத்தி, அக்கூடாரத்தை எட்டிப் பார்த்தாள்.

‘எல்லோரும் சிரித்துக்கொண்டும் விளையாடிக் கொண்டுமிருக்கிறார்கள். ஆனால் நீ என்னவோ கோஷா பெண் மாதிரி உள்ளேயே உட்கார்ந்திருக்கிறாயே’ என்று ஏளனமாகக் கேட்டுச் சிரித்தாள். நெப்பேலியன் அவளது பேச்சுக்கு காதுகொடுக்கவில்லை. படிப்பில் ஆழ்ந்திருந்தான். சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கிக்கொண்டு சென்றுவிட்டாள் அந்த கிராமத்துப் பெண்.

பல வருடங்கள் உருண்டோடின. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நெப்போலியன் பிரெஞ்சு நாட்டின் சக்கரவர்த்தியாகி அந்த ஊருக்கு வந்திருந்தான். அந்த பழைய நிகழ்ச்சி அவன் நினைவுக்கு வந்தது.

அவள் எங்கு இருக்கிறாள் என்று விசாரித்து அறிந்துகொண்டான். அவளுடைய வீட்டுக்குச் சென்று ‘(என்ன அம்மா! என்னை நினைவு இருக்கிறதா?’ என்றான். அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். உடனே பணிந்து, ‘பிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியனா? உங்களை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறேனே!’ என்றாள் வியப்போடு.

‘ஆமாம் அம்மா, ஆமாம் …. ஒரு காலத்தில் இந்த ஊரில் நான் சாதாரண படை வீரனாகக் கூடாரத்தில் உட்கார்ந்திருந்தேன். அப்போது நீ என்னைக் ‘கோஷா’ என்று ஏளனம் செய்தாய். நான் அதைக் காதில் வாங்காததுபோல் இருந்துவிட்டேன். நினைவிருக்கிறதா?’ என்றான். ‘ஆமாம், நீங்கள் சொல்லுவதும் சரிதான்’ என்று ஆழ்ந்த யோசனையோடு சொன்னாள் அவள். ‘அன்று மற்றவர்களைப்போல் நானும் விளையாடிக் கொண்டிருந்தால், இன்னும் அவர்களைப் போலத்தான் இருந்திருப்பேன்!’ என்றான் நெப்போலியன். அவள் வாயடைத்துத் திகைத்து நின்றாள்.

One Reply on “கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *