கோடாரியால் பூ பறித்தால் பழமொழி கதைகள்

கோடாரியால் பூ பறித்தால் பழமொழி கதைகள்

உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. அதில் காய்கறிகளை பயிரிட்டான் அவன். நாள்தோறும் ஒரு முயல் அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்து இலை, பிஞ்சுகளைத் தின்று வந்தது. அதைப் பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல் அவனிடம் சிக்கவே இல்லை.

எப்படியும் முயலைப் பிடித்தாக வேண்டும் என்று நினைத்த அவன் அரசனிடம் சென்றான். “அரசே என் தோட்டத்தை முயல் ஒன்று பாழாக்குகிறது. நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்றான். சிரித்த அரசன் ‘ஒரு முயலைப் பிடிக்க உன்னால் முடியவில்லையா?” என்று கேட்டான்.

“அரசே! அந்த முயலுக்கு மாய மந்திரம் தெரிந்திருக்க வேண்டும். நான் அதைப் பார்த்துக் கல்லையோ கட்டையையோ வீசினாலும் அவை அதன் மீது படுவது இல்லை” என்றான் அவன்.

“நாளையே வேட்டை நாய்களுடன் நான் அங்கு வருகிறேன். முயலின் மாய மந்திரம் எதுவும் என் வேட்டை நாய்களிடம் செல்லாது. அந்த முயலைப் பிடித்த பிறகுதான் நான் அங்கிருந்து திரும்புவேன்” என்றான் அரசன்.

மகிழ்ச்சியுடன் தன் தோட்டத்திற்கு வந்தான் அவன். இனி முயலின் தொல்லை இருக்காது என்று நினைத்து அரசனுக்கும் அவன் வீரர்கட்கும் சிறப்பான விருந்திற்கு ஏற்பாடு செய்தான். மறுநாள் படை வீரர்கள், வேட்டைக்காரர்கள், நாய்கள் சூழ அரசன் அங்கு வந்தான்.

எல்லோரையும் வரவேற்ற உழவன் அவர் களுக்குச் சிறப்பாக விருந்து வைத்தான். விருந்து முடிந்தது. மகிழ்ச்சி அடைந்த அரசன் “இன்னும் சிறிது நேரத்தில் அந்த முயல் என்ன கதி ஆகிறது பார்” என்று வேட்டையாடப் புறப்பட்டான்.

வேட்டைக்காரர்கள் கொம்புகளை ஊதினார்கள். வேட்டை நாய்கள் பயங்கரமாகக் குரைத்துக் கொண்டே தோட்டத்திற்குள் பாய்ந்தன. புதரில் மறைந்திருந்த முயல் அச்சத்துடன் வெளியே வந்தது. அங்கிருந்த வேலியை நோக்கி ஓடியது.

அதைப் பார்த்த அரசன், “அந்த முயலைத் தப்ப விடாதீர்கள், பிடியுங்கள்” என்று கத்தியபடி வேலிப் பபக்கம் ஓடினான். வேட்டைக்காரர்களும் வீரர்களும் அரசனைத் தொடர்ந்து ஓடினார்கள்.

தப்பிக்க நினைத்த முயல் தோட்டத்திற்குள் அங்கும் இங்கும் ஓடியது. அவர்கள் அனைவரும் அதைத் துரத்தினார்கள். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் ஒரு வேட்டை நாய் பாய்ந்து அந்த முயலைக் கவ்விப்பிடித்தது. வெற்றிப் பெருமிதத்துடன் அந்த முயலை உழவரிடம் காட்டினான் அரசன். இவர்களின் முயல் பிடிக்கும் முயற்சியில் தன் அழகான தோட்டம் முற்றிலும் நாசமாகி விட்டதை அறிந்து வருந்தினான் உழவன்.

“சிறு வேலைக்குப் பெரியவர்கள் உதவி கேட்பது தவறு என்று உணராமல் போனேனே. என் அழகான தோட்டம் அழித்துவிட்டதே. ஒரு முயல் என்ன ஆயிரம் முயல்கள் பல நாட்கள் வந்திருந்தாலும் இப்படிப்பட்ட அழிவை ஏற்படுத்தி இருக்க முடியாதே. என் முட்டாள்தனத்தால் பேரழிவைத் தேடிக் கொண்டேன்” என்று வருந்தினான் அவன்.

பழமொழி கதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *