மன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்

மன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்

முல்லா கதைகள்
ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி “முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள், ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவருடைய மதிப்பு என்ன என்ற கூறி விடுவீர்களாமே! “என்று கேட்டார்.

“அல்லாவின் அருளால் எனக்கு அப்படிப்பட்ட ஒரு ஆற்றல் இருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன்” என்று முல்லா அடக்கமாகப் பதில் சொன்னார். “சரி, இப்போது நீர் என்னை உமது மனத்தில் எடைபோட்டுப் பார்த்து என்னுடைய உண்மையான மதிப்பு என்ன என்று கூறும் பார்க்கலாம்” என்று மன்னர் கேட்டுக் கொண்டார். முல்லா மன்னரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார், பிறகு அடக்கமான குரலில் மன்னர் பெருமான் அவர்களே தங்களுடைய உண்மையான மதிப்பு பத்துப் பொற்காசுகள்தான் என்றார்.

இதனைக் கேட்ட மன்னருக்குத் தூக்கிவாரிப் போட்டது. முல்லா தன்னை வேண்டுமென்றே அவமரியாதை செய்கிறர்  என்று ஆத்திரப்பட்டார். என்னை நீர் எவ்வளவு கேவலப்படுத்தி விட்டீர் தெரியுமா ? என் இடுப்பில் அணிந்திருக்கும் கச்சையின் மதிப்பே பத்துப் பொற்காசுகள் இருக்குமே என்று சீற்றத்துடன் கேட்டார்.

முல்லா சீற்றம் அடையாமல் மன்னர் பிரான் அவர்களே நான் சொன்னது தங்களது கச்சையின் மதிப்பைப் பற்றித்தான். தனிப்பட்ட உங்கள் உடலுக்கு ஒரு காசுகூட மதிப்புப் போட முடியாது.  இது உங்களைப் பற்றி மட்டும் கூறப்படுவது அல்ல. இந்த உடல் எத்தனை காலம் இந்த உலகில் நடமாட முடியும். உடலிருந்து உயிர் அகன்ற விட்டல் மன்னர் என்ற முறையில் இன்று உங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் தொடர்ந்து நீடிக்குமா ? அப்படிப்பட்ட அழியும் ஒரு பொருளான உடம்புக்கு என்ன மதிப்பு இருக்க முடியுமா ? என்று முல்லா பதில் அளித்தார். முல்லாவின் அந்தச் சாதுரியமான பதில் துருக்கி மன்னரின் ஆத்திரத்தை அடக்கி அவரைச் சிந்திக்க வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *