புத்திசாலி பெர்னாட்ஷா

புத்திசாலி பெர்னாட்ஷா

 

george_bernard_shaw_statue-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b7%e0%ae%be

அறிஞர் பெர்னாட்ஷா சிறுவயதில் வறுமையில் வாடினார். அவருடைய தந்தை மகாகுடிகாரர். குடும்ப பொறுப்பு இல்லாதவர். பெர்னாட்ஷாவின் தாய் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்தார். அதன் முலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வந்தார். அதனால், மகனுக்கு நல்ல கல்வியை அவரால் கொடுக்க முடியவில்லை.

பெர்னாட்ஷா, சிறுவயதில் ஒரு அலுவலகத்தில் எடுபிடி வேலை பார்த்து வந்தார். அந்த வேலை அவருக்கு பிடிக்கவில்லை. தனது வாழ்க்கை வீணாகி போகுமே என்ற அச்சம் ஏற்பட்டது. வேலையை விட்டு விலகி, தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “இறைவன் கொடுத்தது ஒரேயொரு வாழ்க்கை. அதையும் எடுபிடி வேலையில் சேர்ந்து வீணாக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டார்.

அதன்பிறகு வாழ்க்கை போராட்டத்தில் சலிப்பின்றி தன்னம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போட்டார். உலகபுகழ் பெற்ற நாடக ஆசிரியரானார். இலக்கியத்திற்கான நோபல் பரிசும் பெற்றார்.

இந்த வெற்றி அவ்வளவு சுலபமாக அவருக்கு கிடைத்து விடவில்லை. நாவல்கள் பல எழுதித் தோல்வி கண்டார். சோதனைகளையும், வேதனைகளையும், தோல்விகளையும் அடுத்தடுத்து சந்தித்தார். ஆனால், துவளவில்லை. விடாமுயற்சிடன் தன் லட்சியத்தைத் தொடர்ந்தார். வாழ்வில் வெற்றி கண்டார்.

கிண்டல்,கேலி செய்வதில் அறிஞர் பெர்னாட்ஷா அவர்களுக்கு ஈடு யாரும் கிடையாது.அவர் ஒரு சமதர்மவாதி(SOCIALIST).இருந்தாலும் சமதர்ம தத்துவத்தையே கிண்டல் செய்வார். ஆங்கிலம் தான் அவருக்குத் தாய்மொழி.அந்த ஆங்கிலம் கூட அவரது கிண்டல்,கேலியிலிருந்து தப்ப முடியவில்லை.ஒரு நாள் ஒரு காகிதத்தில் GHOTI என்று எழுதி பக்கத்திலிருந்த ஆங்கில அறிஞர்களிடம் படிக்கச் சொன் னார்.ஒருவர் ‘கொட்டி’ என்றும் இன்னொருவர் ‘கோட்டி’ என்றும் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரியாக உச்சரித்தார்கள்.இறுதியில் அனைவரும் தவறு என்று கூறிய ஷா அதை FISH என்று உச்சரித்தார்.அனைவரும் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

பின் அவர் ROUGH என்ற வார்த்தையில் GHக்கு என்ன உச்சரிப்பு வரும் என்று கேட்டார்.உடனே அவர்கள்F என்று சொன்னார்கள்.பின் WOMEN என்ற வார்த்தையில் O க்கு என்ன உச்சரிப்பு என்று கேட்க அவர்கள் Iஎன்று சொன்னார்கள்.அடுத்து STATION என்ற வார்த்தையில்TI என்பதை எப்படி உச்சரிப்பது என்று கேட்டார்.அவர்களும் SHஎன்று சொன்னார்கள்.அப்படியானால் இந்த வார்த்தை GHOTIயை நான் ஏன் FISHஎன்று உச்சரித்தால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறீர்கள்?”என்று கேட்டார்.வந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

ஒரு முறை அறிஞர் பெர்னாட்ஷா ஒரு ஓவியரி டம் தனது படத்தை வரைந்து தரும்படி கேட்டுக்கொண்டார். அதற்குக் கூலியாக 100 பவுண்ட்ஸ் தருவதாகவும் ஒப்புக்கொண்டார்.அந்த ஓவியரும் ஷாவை சிறப்பாக வரைந்துகொண்டுவந்து கொடுத்தார். அந்த ஓவியத்தைப் பார்த்து மகிழ்ந்த ஷா சிறிது நேரம் யோசித்துவிட்டு நூறு பவுண்ட்ஸ் கூலியை இருபது பவுண்ஸாகப் பிரித்து ஐந்து காசோலைகளில் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

மறுநாள் திரும்பிவந்த ஓவியர் “ஐயா, தாங்கள் நூறு பவுணுக்கு ஒரே காசோலையைத் தரக்கூடாதா? ஏன் இருபது பவுண்ஸ்களாக ஐந்து காசோலைகளை கொடுத்தீர்கள்?” என்று கேட்டார்.“அது பற்றிப் பிறகு சொல்கின்றேன். காசோலையை வங்கியில் மாற்றிவிட்டீர் களா?” என்று கேட்டார் ஷா. “இன்னும் இல்லை” என்றார் ஓவியர்.

“இனியும் மாற்றிவிட வேண்டாம். இப்போது என் கையெழுத்துக்கு விலை மிகவும் அதிகம். ஒரு கையெழுத்துக்காக நானே முப்பது பவுண்ஸ் வாங்குகின்றேன். என் கையெழுத்துக்காக ஏங்கும் சில ஆசாமிகளிடம் இந்த ஐந்து காசோலைகளையும் தனித்தனியே விற்றால் உங்களுக்கு நூற்றைம்பது பவுண்ஸ் கிடைக்கும். உங்களுக்கு ஐம்பது பவுண்ஸ் இலாபம் கிடைக்கும். எனக்கும் நூறு பவுண்ஸ் இலாபம் கிடைக்கும்” என்றார் ஷா.

“எனக்கு இலாபம் கிடைக்கும் சரி. உங்களுக்கு எப்படி இலாபம் கிடைக்கும்?” என்றார் அந்த ஓவியர்.

“என் கையெழுத்துள்ள காசோலையை அவர்கள் வங்கிக்குச் சென்று மாற்றப்போவதில்லை. அவர்கள் என் கையெழுத்துக்காக வைத்துக்கொள்வார்கள். அப்படியானால் எனக்கும் நூறு பவுண்ட்ஸ் இலாபம் தானே?” என்றார் பெர்னாட்ஷா.

 

One Reply on “புத்திசாலி பெர்னாட்ஷா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *