Warning: Use of undefined constant HTTP_USER_AGENT - assumed 'HTTP_USER_AGENT' (this will throw an Error in a future version of PHP) in /home/puthisal/public_html/kathaikal.com/wp-content/themes/eduexpert/header.php on line 43 இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர் – TAMIL STORIES
இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்றுகூட்டவில்லை. மாறாக, (மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது(பெருங்குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது. அவர் என்னிடம் கூறினார்: நான் “லக்ம்” , “ஜுதாம்” ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டேன். அப்போது கடல் அலை ஒரு மாதகாலம் எங்களைக் கடலில் அலைக் கழித்துவிட்டது. பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் (மேற்குத்) திசையில் ஒரு தீவில் ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம்.
அங்கு (உடல் முழுவதும் அடர்ந்த) முடிகள் நிறைந்த ஒரு பிராணி எங்களைச் சந்தித்தது. அதன் முன்பகுதி எது,பின்பகுதி எது என்றே எங்களால் அறிய முடியவில்லை. (உடல் முழுவதும்) முடிகள் நிறைந்திருந்ததே அதற்குக் காரணம். அப்போது நாங்கள், “உனக்குக் கேடுதான். நீ யார்?” என்று கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி “நான்தான் ஜஸ்ஸாஸா”என்று சொன்னது. “ஜஸ்ஸாஸா என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி, “கூட்டத்தாரே! இந்த மண்டபத்திற்கு உள்ளே இருக்கும் மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தி அறிய ஆவலாக உள்ளார்” என்று சொன்னது. அந்தப் பிராணி ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டு அது ஷைத்தானாக இருக்குமோ என்று நாங்கள் பயந்துவிட்டோம். உடனே நாங்கள் அந்த மனிதனை நோக்கி விரைந்து நடந்தோம். நாங்கள் அந்த மண்டபத்தைச் சென்றடைந்தோம். அங்கு மாபெரும் உருவமுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தான். அவனுடைய கைகள் அவனது தோளோடு சேர்த்து வைத்து இறுகக்கட்டப்பட்டிருந்தன. அவனுடைய முழங்கால்கள் கணுக்கால்களோடு சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. அவனிடம் நாங்கள், “உனக்குக் கேடுதான். நீ யார்?” என்று கேட்டோம். “என்னைப் பற்றிய தகவலை நிச்சயம் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். (முதலில்) நீங்கள் யார் என்று கூறுங்கள்?” என்று கேட்டான். “நாங்கள் அரபு மக்கள். நாங்கள் கப்பலொன்றில் கடல் பயணம் மேற்கொண்டோம். கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஒரு மாதகாலமாகக் கடல் அலை எங்களை அலைக்கழித்துவிட்டது. பிறகு நீயிருக்கும் இந்தத் தீவில் நாங்கள் கரை ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து இந்தத் தீவுக்குள் நுழைந்தோம். அப்போது உடல் முழுவதும் அடர்ந்த முடிகள் கொண்ட பிராணி ஒன்று எங்களைச் சந்தித்தது. உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருந்த காரணத்தால் அதன் முன்பகுதி எது, பின்பகுதி எது என்று அறிய முடியவில்லை. நாங்கள் “உனக்குக் கேடுதான். நீ யார்?” என்று கேட்டோம். அது “நான்தான் ஜஸ்ஸாஸா” என்று சொன்னது. “ஜஸ்ஸாஸா என்றால் என்ன?” என்று கேட்டோம். அதற்கு அது, “இந்த மண்டபத்திலுள்ள இந்த மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தியை அறிய பெரும் ஆவலுடன் இருக்கிறார்” என்று கூறியது. ஆகவேதான், நாங்கள் உன்னை நோக்கி விரைந்து வந்தோம். அது ஷைத்தானாக இருக்கலாம் என்பதால் எங்களால் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை” என்று சொன்னோம். அப்போது அவன், “பைசான் பேரீச்சந்தோட்டத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்றான். “அந்தத் தோட்டத்தில் நீ எதைப் பற்றிக் கேட்கிறாய்?” என்று கேட்டோம். அதற்கு அவன், “அந்தப் பேரீச்சந்தோட்டத்தின் மரங்கள் கனிகள் தருகின்றனவா என்பதைப் பற்றியே நான் கேட்கிறேன்” என்றான். நாங்கள் “ஆம்” என்று பதிலளித்தோம். அவன், “அறிந்துகொள்ளுங்கள். அது கனியே தராத காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்று கூறினான். பிறகு “தபரிய்யா நீர்நிலை பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டான். “அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?”என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவன், “அதில் தண்ணீர் இருக்கிறதா?” என்று கேட்டான். நாங்கள், “அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது” என்று பதிலளித்தோம். அவன், “அறிந்துகொள்ளுங்கள்: அதிலுள்ள நீர் வற்றும் காலம் நெருங்கிவிட்டது” என்று சொன்னான். பிறகு, “(ஷாம் நாட்டிலுள்ள) ஸுஃகர் நீரூற்றைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டான். நாங்கள், “அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?” என்றோம். அதற்கு அவன், “அந்த ஊற்றில் தண்ணீர் உள்ளதா? அந்த ஊற்றுத் தண்ணீரால் மக்கள் பயிர் செய்கிறார்களா?” என்று கேட்டான். நாங்கள் “ஆம், அதில் தண்ணீர் அதிகமாக உள்ளது. அங்குள்ளவர்கள் அந்தத் தண்ணீரால் விவசாயம் செய்கிறார்கள்” என்று சொன்னோம். பிறகு அவன், “எழுத்தறிவற்ற மக்களின் இறைத்தூதர் பற்றி எனக்குச் சொல்லுங்கள். அவர் (இப்போது) என்ன செய்கிறார்?” என்று கேட்டான்.
நாங்கள், “அவர் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்று யஸ்ரிபில் (மதீனாவில்) தங்கியிருக்கிறார்” என்று பதிலளித்தோம். அவன், “அவருக்கும் அரபியருக்குமிடையே போர் நடந்ததா?” என்று கேட்டான். நாங்கள், “ஆம்” என்றோம். அவன், “அவர்களை அவர் என்ன செய்தார்?” என்று கேட்டான். நாங்கள், “அவர், தம் அருகிலுள்ள அரபியரை வெற்றி கொண்டுவிட்டார். அரபியர் அவருக்குக் கட்டுப்பட்டு விட்டனர்” என்று சொன்னோம். அதற்கு அவன், “அப்படித்தான் நடந்ததா?” என்று கேட்டான். நாங்கள் “ஆம்” என்றோம். அவன், “அறிந்துகொள்ளுங்கள். அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும். (இனி) நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்: நான்தான் மசீஹ் (அத்தஜ்ஜால்) ஆவேன். நான் (இங்கிருந்து) புறப்பட அனுமதிக்கப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நான் புறப்பட்டு வந்து, நாற்பது நாட்களில் பூமியில் எந்த ஓர் ஊரையும் விட்டுவைக்காமல் பூமியெங்கும் பயணம் செய்வேன்; மக்காவையும் தைபாவையும் தவிர! அவ்விரண்டிற் குள்ளேயும் நுழைவது எனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்விரு நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நுழைய நான் நாடும்போதெல்லாம் என்னை நோக்கி வானவர் ஒருவர் வருவார். அவரது கையில் உருவியவாள் இருக்கும். (அதை வைத்து) அதற்குள் நுழைய விடாமல் அவர் என்னைத் தடுத்துவிடுவார். அதன் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர் ஒருவர் இருந்து, அதைக் காவல் காத்துக்கொண்டிருப்பார்” என்று கூறினான். இதைக் கூறியபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்மிடமிருந்த கைத்தடியால் சொற்பொழிவு மேடைமீது குத்தியவாறு இது -அதாவது மதீனா நகரம்-தான் தைபா; இதுதான் தைபா; இதுதான் தைபா” என்று கூறிவிட்டு, “இதைப்பற்றி நான் உங்களுக்கு (முன்பே) அறிவித்துள்ளேன் அல்லவா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (அறிவித்தீர்கள்)” என்று பதிலளித்தனர். “தமீமுத் தாரீ சொன்ன இந்தச் செய்தி, தஜ்ஜாலைப் பற்றியும் மதீனா மற்றும் மக்கா பற்றியும் நான் ஏற்கெனவே உங்களிடம் நான் கூறியிருந்ததற்கு ஒப்பவே அமைந்திருக்கிறது” என்று கூறினார்கள். பிறகு அறிந்துகொள்ளுங்கள்: அ(ந்தத் தீவான)து, ஷாம் நாட்டுக் கடலில், அல்லது யமன் நாட்டுக் கடலில் உள்ளது. இல்லை; அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதி கடலில் உள்ளது” என்று (அறுதியிட்டுச்) சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறும்போது கிழக்குத் திசையை நோக்கி தமது கரத்தால் சைகை செய்தார்கள். ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே மனனமிட்டேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. Book :52